புதன், ஜனவரி 04, 2012

மின்தடைகளில் இருந்து நிரந்தரமாக விடுபடுவதற்கு


மதுரை : மின்தடைகளில் இருந்து நிரந்தரமாக விடுபடுவதற்காக, தமிழ்நாடு எரிசக்தி வளர்ச்சி முகமை (டெடா) அறிமுகப்படுத்தியுள்ள "ஒரு கிலோ வாட் சோலார் பவர் பேக்' திட்டத்தை வீடுகளில் பயன்படுத்தலாம், என டெடா துணைப் பொதுமேலாளர் சையது அகமது தெரிவித்தார்.

அவர் கூறியதாவது: வீடுகள் மற்றும் நிறுவனங்களில் மின்தடை ஏற்பட்டால், இன்வெர்ட்டர்கள் பயன்படுத்தப்படுகிறது. இவற்றால் மூன்று மணி நேரம் வரை மட்டுமே தொடர்ந்து செயல்பட முடியும். ஒரு கிலோ வாட் சோலார் பவர் பேக் மூலம் தொடர்ந்து 16 மணி நேரம் மின்சாரம் பெறமுடியும். இதற்கான சோலார் அமைப்பை ஏற்படுத்த 2.2 லட்சம் ரூபாய் செலவாகும். ஒரு நாள் 8 யூனிட் மின்சாரம் இதன் மூலம் உற்பத்தி செய்யப்படும். வீடுகளில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் , அனைத்து மின்சாரப் பொருட்களும் இந்த மின்சாரத்தால் இயக்க முடியும். சோலார் அமைப்பை ஏற்படுத்த திறந்த வெளியில் 65 சதுர அடி இடம் தேவை. சோலார் அமைப்பை ஏற்படுத்த விரும்புவோர் தமிழ்நாடு எரிசக்தி வளர்ச்சி முகமை அலுவலகங்களில் விண்ணப்பித்து, 50 சதவீதம் மானியம் பெற்றுக் கொள்ளலாம்.

சாதாரணமாக பயன்படுத்தும் மின்சார செலவினை ஒப்பிடுகையில், சோலார் அமைப்பை ஏற்படுத்திய எட்டு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கும் மின்சாரம் லாபக்கணக்கில் வரும். சோலார் அமைப்பினை பராமரிப்பு செய்வது மிகவும் எளிமையானது. சோலார் தகடுகளை சுத்தம் செய்தால் போதும். வீடுகள் மற்றும் அலுவலகங்களில் இந்த வசதியை பொதுமக்கள் ஏற்படுத்தி, மின்தடை பிரச்னைகளில் இருந்து நிரந்தரமாக விடுபடலாம். விபரங்களுக்கு, மதுரை அண்ணா பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள தமிழ்நாடு எரிசக்தி வளர்ச்சி முகமை அலுவலகத்தை 0452 - 253 5067 ல் தொடர்பு கொள்ளலாம்.


குறிப்பு : இது எனது பதிவு இல்லை நான் முன்பு படித்ததை copy செய்து வைத்து இருந்தேன் யார் பதிவு என்று தெரிய வில்லை தெரிந்தால் அந்த லிங்க் கொடுத்து இருப்பேன்.